மொபைல்போனை கழிவறைக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சுத்தத்தைக் குறித்துத் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருந்தாலும், இது போன்ற பழக்கவழக்கங்கள் உடல்நல பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
இந்நிலையில், `NordVPN' என்ற நெட்வொர்க் இணைப்பை வழங்கும் நிறுவனம், இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் 10-ல் 6 பேர், குறிப்பாக இளைஞர்கள் கழிவறையில் மொபைல் போனை உபயோகிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில்...
* 61.6 சதவிகிதம் பேர், கழிப்பறை இருக்கையில் அமர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்த்ததாக ஒப்புக்கொண்டனர்.
* 33.9 சதவிகிதத்தினர், தற்போதைய நடப்புகளை அறிந்து கொள்வதற்காக, மொபைல்போனை பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
* 24.5 சதவிகிதம் பேர், தங்களின் அன்புக்குரியவர்களுக்குச் செய்தி அனுப்புவது அல்லது அழைப்புகளை மேற்கொள்வதற்காக, மொபைல்போனை கழிவறையில் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போனை கழிவறைகளில் பயன்படுத்தும் போது மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள், மொபைல்போனில் வாழ்வதற்கான நிலையை நாமே ஏற்படுத்துகிறோம்.
தொடர்ந்து ஒருநாள் முழுக்க அந்த மொபைலை பயன்படுத்தும் போது, மொபைலில் உள்ள பாக்டீரியாக்கள் கண், வாய் மற்றும் மூக்கின் வழியாக மனித உடலுக்குள் நுழைவதற்கான ஆபத்துகள் அதிகம் உள்ளது. அறிக்கையின் படி, மொபைல்போன் திரையில் கிருமிகள் 28 நாள்கள் வரை உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தொற்று கட்டுப்பாட்டு நிபுணரான டாக்டர் ஹெக் ஹேடன் கூறுகையில், ``கழிப்பறை இருக்கைகளைவிட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை, ஸ்மார்ட்போன்கள் எடுத்துச் செல்ல முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. மேலும் சுகாதாரக் கண்ணோட்டத்தில், மொபைல்போனின் தொடுதிரைகள் `டிஜிட்டல் யுகத்தின் கொசு' என்று விவரிக்கப்பட்டுள்ளன.
ழிவறை இருக்கையைவிட மோசமானதா ஸ்மார்ட்போன் திரை... ஆய்வுகள் சொல்வது என்ன?
கழிப்பறை இருக்கைகள் `Staphylococcus aureus' உட்பட தீங்கு விளைவிக்கும் பல கிருமிகளைக் கொண்டுள்ளன. இந்த நோய்க்கிருமிகள் சிறுநீர் நோய்த்தொற்றுகள், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, ஃபுட் பாய்சனிங் மற்றும் சரும நோய்த்தொற்றுகள், சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும்.
உங்கள் தொலைபேசியை கழிப்பறைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். இயர்பட்ஸ் மற்றும் இதர கேட்ஜெட்டுகளையும் கழிவறைக்குள் கொண்டு செல்ல வேண்டாம். எனவே, பொழுதுபோக்கைத் தவிர்த்துவிட்டு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது'' என்று தெரிவித்துள்ளார்.
