பலவித உடல்நலப் பிரச்னைகளுக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவது ஏன்?

ரத்தப் பரிசோதனை ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.


ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணாசென்னை.

அந்தக் காலத்தில் மர்மக் காய்ச்சல் என்ற பெயரில் இறந்துபோனவர்கள், ஒருவேளை ரத்தப் புற்றுநோயால் இறந்தவர்களாகவும் இருக்கலாம். காரணம், அப்போதெல்லாம் ரத்தப் பரிசோதனை வசதிகள் இல்லை. இன்று எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ரத்தப் பரிசோதனைக்கான கருவிகள் இருக்கின்றன.

சாதாரண காய்ச்சலுடன் செல்பவருக்குக்கூட ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து, தட்டணுக்கள் குறைந்திருந்தால் அது டெங்கு என புரிந்து கொள்வதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் வசதிகள் வந்துவிட்டன. வெள்ளை அணுக்கள் கூடியிருந்தால் காய்ச்சலின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம். மலேரியா கிருமிகளை ரத்தத்தில் அடையாளம் காண முடியும். பள்ளிக்குழந்தைகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் ரத்தச்சோகை பாதிப்பைக் கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும் முடியும்.

ரத்தவியலைப் பொறுத்தவரை ரத்தப் பரிசோதனை என்பது ஹீமோகுளோபின், ரத்த வெள்ளையணுக்கள், மற்றும் தட்டணுக்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய கம்ப்ளீட் பிளட் கவுன்ட் (CBC) எனப்படும் முழுமையான சோதனை. இது தவிர அந்தந்த நபரின் பிரச்னை மற்றும் தேவைக்கேற்ப ரத்தப் பரிசோதனை வேறுபடும்.


எந்தப் பிரச்னைக்கும் நாமாக ரத்தப் பரிசோதனை செய்து ஒரு முடிவுக்கு வராமல், மருத்துவ ஆலோசனையோடு செய்து பார்த்து, ரிசல்ட்டுக்கேற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையைப் பின்பற்றுவதுதான் சரியானது.