Grapes Benefits In Tamil: தற்போது மக்கள் தங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள்.
வைட்டமின் சி என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஆரஞ்சு பழங்கள் தான். ஆனால் ஆரஞ்சு பழங்களைப் போன்றே திராட்சையிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளன என்பது தெரியுமா?
அதோடு திராட்சை தற்போது அனைத்து பருவங்களிலும் கிடைக்கிறது. மேலும் பெரும்பாலானோர் விரும்பி உட்கொள்ளும் பழமும் கூட. இந்த திராட்சையில் வைட்டமின் சி மட்டுமின்றி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நீர்ச்சத்து, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளதால், இதை உட்கொள்ளும் போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
அதுவும் தினமும் ஒரு கையளவு திராட்சையை உட்கொண்டு வந்தால், பல நோய்களின் அபாயத்தைத் தடுக்கலாம். இப்போது திராட்சையை தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
ஏற்கனவே கூறியது போல, திராட்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இவை உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் தொற்றுக்களை திறம்பட எதிர்த்துப் போராடும் வகையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். எனவே திராட்சையை தினசரி சாப்பிடுவதன் மூலம், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கும்.
2. புற்றுநோய் தடுக்கப்படும்
திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிரம்பியுள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தி, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
முக்கியமாக இதில் ரெஸ்வெராட்ரால் என்று அழைக்கப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது புற்றுநோய் செல்களைத் தடுக்கும் மற்றும் அதன் வளர்ச்சியை அழிக்கும் திறன் கொண்டது. மேலும் திராட்சையில் கேட்டசின்கள், க்யூயர்சிடின் மற்றும் அந்தோசையனின்கள் போன்ற புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பிற சக்தி வாய்ந்த ஆன்டி.ஆக்ஸிடன்டுகளும் உள்ளன.
3. இரத்த அழுத்தம் குறையும்
திராட்சையில் சோடியம் மிகவும் குறைவு. எனவே உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் திராட்சையை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்கும். மேலும் திராட்சையில் பொட்டாசியம் அதிகம் உள்ளன.
இது இரத்த அழுத்தத்தை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. உடலில் பொட்டாசியம் மிகவும் குறைவாக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே பொட்டாசியம் குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் திராட்சையை தினமும் சாப்பிடுங்கள்.
4. இதய நோயைத் தடுக்கும்
திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரால், புற்றுநோயை மட்டும் தடுப்பதில்லை, இதய நோயில் இருந்தும் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு ஆய்வில் சோடியத்தை விட பொட்டாசியத்தை அதிகமாக உட்கொள்பவர்கள் இதய நோயால் மரணிப்பது குறைவது தெரிய வந்துள்ளது. எனவே இதய நோயால் பாதிக்கப்படக்கூடாதெனில் திராட்சையை தினமும் ஒரு கையளவு சாப்பிட முயலுங்கள்.
5. கொலஸ்ட்ரால் குறையும்
திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. எனவே உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க நினைத்தால், அதற்கு திராட்சையை சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்கும். திராட்சையை தினமும் சாப்பிடும் போது, அது இரத்த நாளங்களில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, வெளியேற்றப்படும். ஆய்வுகளில் கூட தினமும் சிவப்பு திராட்சையை உட்கொண்டு வந்தவர்களின் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
6. சர்க்கரை நோயில் இருந்து பாதுகாக்கும்
திராட்சையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு என்பதால், திராட்சையை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. சொல்லப்போனால், திராட்சையில் உள்ள சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரித்து, குளுக்கோஸை உடல் பயன்படுத்த உதவி புரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
7. மூளைக்கு நல்லது
திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரால், உடலுக்கு பல வழிகளில் நன்மை அளிக்கிறது. இந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவி புரிந்து, மூளையில் நேர்மறை விளைவை ஏற்படுத்துகிறது. ஒருவருக்கு அல்சைமர் மற்றும் பர்கின்சன் போன்ற ஞாபக மறதி நோய்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் தான் வருகின்றன. எனவே திராட்சையை தினமும் உட்கொள்வதன் மூலம், மூளை நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும்.
8. எலும்புகளுக்கு நல்லது
திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவி புரிகின்றன. ஆகவே வயதான காலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில், தினமும் ஒரு கையளவு திராட்சையை சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
9. இளமை மற்றும் வாழ்நாள் நீடிக்கும்
நீங்கள் உங்கள் இளமையை நீட்டிக்க விரும்புகிறீர்களா? நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? அப்படியானால் அதற்கான எளிய வழி தினமும் திராட்சையை உட்கொள்வது தான். ஆம், திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள செல்களின் அமைப்பு பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு, உடலில் உள்ள செல்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். இதன் விளைவாக இளமை நீடிப்பதோடு, வாழ்நாளும் நீடிக்கும்.
10. தூக்கம் மேம்படும்
தற்போது நிறைய பேர் இரவு நேரத்தில் தூக்கத்தைப் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. அப்படிப்பட்ட நல்ல தூக்கத்தை திராட்சை வழங்கும். அதற்கு தினமும் அவற்றை உட்கொள்ள வேண்டும். முக்கியமாக திராட்சையில் கலோரிகள் இல்லை என்பதால், ஸ்நாக்ஸ் நேரத்தில் கண்டதை சாப்பிடாமல் திராட்சையை சாப்பிடுங்கள்.
