சென்னை: மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு மிக முக்கியதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் கடைசி படமாக உருவான மாமன்னன் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் வெளியான நாளில் பகத் பாசில், வடிவேலுவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பக்ரீத் பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை வெளியானத் இத்திரைப்படம் இதுவரை 10 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளி வருகிறது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உதயநிதி ஸ்டாலின்: மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால், இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சினிமா பிரியர்களை மட்டுமில்லாமல், அரசியல் பிரமுகர்களிடமும் ஆவலைத் தூண்டியது. மிகுதியாக இருந்த ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஆதிவீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த உதயநிதி ஸ்டாலின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

அட்டகாசமான நடிப்பு: இத்தனை ஆண்டுகளாக நம்மை சிரிக்க வைத்து அழகு பார்த்த வடிவேலு, இத்திரைப்படத்தில் கண்ணீரை கசக்கி பிழியவைத்துள்ளார். மாமன்னன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் அப்லாசை அள்ளி உள்ளார். வடிவேலுவின் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

குவியும் பாராட்டு: மாமன்னனை பார்த்த இயக்குநர் வசந்தபாலனால், வடிவேலு அவர்களுக்கு நடிகனாக ஒரு பெரிய மடைமாற்றம். அவரே நம்பாத ஒரு மாற்று பாதை. அந்த பாதையில் சிங்கமாக நடந்து செல்கிறார். காட்சிகளில் தன் குற்றவுணர்வை, கையாலாகாத்தனத்தை, காலங்காலமாக அடிவாங்கிய வலியை, அடிமைத் தனத்தை பல்வேறு உடல் மொழிகளில் வெளிப்படுத்திய வடிவேலு அவர்கள் தான் திரை முழுக்க நிறைந்து நிற்கிறார் என்று பாராட்டி இருந்தார்.

வடிவேலுவின் சம்பளம்: உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' மூலம் தயாரித்த மாமன்னன் திரைப்படத்திற்கு, நெகடிவ் சிமர்சனங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டு இருந்தாலும், இப்படம் திரையரங்கில் சக்கைபோடு போட்டு நன்றாக கல்லாக்கட்டி வருகிறது.. இந்நிலையில், இப்படத்தில் மாமன்னன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வடிவேலு ரூ.4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.