டிஸ்கவரி சேனலில் பாலைவனங்களில் சுற்றித் திரியும் மனிதனின் வாழ்வு நிகழ்ச்சியில் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் சிறுநீரை பிடித்து குடிப்பது காட்டப்படும்.

அதை பார்க்கும் போது அருவறுக்கும். ஆனால் விஞ்ஞானிகள் அதை சாத்தியப்படுத்தியுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் இருக்கும் விஞ்ஞானிகள் இதனை ஒரு சவாலாக ஏற்று செய்து அதில் வெற்றியும் அடைந்துள்ளனர். நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்காக இப்படி ஒரு முறையை உருவாக்கியுள்ளது.இந்த ஆய்வு முடிவுகளின் படி விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையை குடிநீராக்கும் முயற்சியில் 98% வெற்றிஅடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்வெளிக்கு செல்லும் ஒவ்வொரு வீரருக்கும், அங்குள்ள ஆய்வு மையத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீராவது தேவைப்படும். இந்த 4 லிட்டரில் குடிநீர், பல் துலக்குதல், கழிப்பிட தேவை, உணவு தயாரிப்பு என அனைத்து தேவைகளும் இதில் அடக்கம்.விண்வெளி நிலையத்தில் நீர் தேவையை பூர்த்தி செய்ய eclss எனப்படும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் உயிர் ஆதரவு அமைப்பு ஒன்று உண்டு.அதில் உள்ள நீர் மீட்பு அமைப்பில் சிறுநீர், வியர்வை போன்ற கழிவுநீர் சேகரிக்கப்படும். இவை தண்ணீராக மாற்றப்படும் நீர்செயலி அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த அமைப்பு சிறுநீரை பிராசஸ் செய்யும் அமைப்பு. இது விண்வெளி வீரர்களின் சிறுநீரை மீட்டெடுக்க வடிகட்டுதல் செயல்முறையைப் பயன்படுத்துகிறது. வடிகட்டுதல் முறை நீர் மற்றும் சிறுநீர் உப்புநீரை தனித்தனியாக பிரித்தெடுக்கும் . இவ்வாறு மறுசுழற்சி முறையில் உருவாக்கப்படும் நீர் எத்தனை சுத்தமானது என்பதையும் சோதித்து அறிய முடியும். water treatment plant மூலமாக உருவாக்கும் தண்ணீரை விட இது சுத்தமானது, பாதுகாப்பானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.